பாலஸ்தீன் சின்னம் பொறித்த கைப்பையுடன் நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி!
பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ’பாலஸ்தீன்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையை பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன்றத்துக்கு எடுத்துவந்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாலாரும் வயநாடு தொகுதி எம்பியுமான பிரியங்கா காந்தி குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தார். அப்போது, ‘பாலஸ்தீன்’ என்று பெயர் மற்றும் பாலஸ்தீன சின்னங்கள் பொறிக்கபட்ட கைப்பையை தன்னுடன் எடுத்துவந்தார் பிரியங்கா காந்தி.
பிரியங்கா தொடர்ந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் போராட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
தில்லியில் உள்ள பாலஸ்தீன் தூதரகப் பொறுப்பாளரான அபெத் எல்ரசேக் அபு ஜசீர் வயநாடு தொகுதியில் ஜெயித்த பிரியங்கா காந்தியை கடந்த வாரம் வாழ்த்தியிருந்தார்.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கடுமையாக விமர்சித்த பிரியங்கா இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளை ’இனப்படுகொலை’ எனவும், ’அரசின் காட்டுமிரண்டித்தனம்’ எனவும் விமர்சித்திருந்தார்.
இதையும் படிக்க | பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் பேச்சுவார்த்தை!
இது தொடர்பாக, ”இஸ்ரேல் அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை கண்டித்து, அதை நிறுத்த வலியுறுத்துவது அனைத்து நியாயமான சிந்தனையுள்ள நபர்களின் பொறுப்பாகும். அதேசமயம் இது இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் உலகின் அனைத்து அரசுகளுக்கும் உள்ள பொறுப்பாகும்" என தனது எக்ஸ் தளப் பதிவில் பிரியங்கா காந்தி குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பாலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகபிரியங்கா காந்தி இன்று எடுத்துவந்த கைப்பை அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.