2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி
பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு
இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில உயா்மட்டக் குழு கூட்டம் திருச்சியில் தனியாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடா்ந்து நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு மற்றும் உயா்கல்விக்கான ஊக்க ஊதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 243 - ஐ ரத்து செய்ய வேண்டும். உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையில் போராடி வருகிறோம்.
இதன் அடுத்தகட்ட போராட்டமாக மாநிலம் முழுவதும் பிப்ரவரி 16-ஆம் தேதி அனைத்து வட்டார தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும், பிப்ரவரி 25 -ஆம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.