பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கும் நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு இந்திய அணி ரசிகர்களிடையே நிலவுகிறது.
விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் திடீரென ஓய்வுபெற்ற நிலையில், இளம் வீரரான ஷுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி வாய்ப்பு அமைந்தது.
இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கில், இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 சதங்கள் உள்பட 722 ரன்கள் குவித்துள்ளார். இதில், 269 ரன்கள் குவித்ததும் அடங்கும். மேலும், 4-வது டெஸ்ட் போட்டியின் இக்கட்டான சூழலில் சதம் விளாசியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது சுனில் கவாஸ்கரின் 47 ஆண்டுகால சாதனை ஒன்றையும் கில் முறியடிக்கவிருக்கிறார். 1978 - 1979 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் குவித்திருந்தார். இந்தச் சாதனையை முறியடிக்க கில்லுக்கு 11 ரன்கள் மட்டுமே தேவை.
அதுமட்டுமின்றி, சுனில் கவாஸ்கர் 1971 ஆம் ஆண்டில் அறிமுகமான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 774 ரன்கள் குவித்திருந்தார். இந்த 53 ஆண்டுகால சாதனையை முறியடிக்க ஷுப்மன் கில்லுக்கு 53 ரன்கள் தேவையாக உள்ளன.
கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியாவின் மேஸ்ட்ரோவான டான் பிராட்மேனின் சாதனையை இந்திய கேப்டன் கில் முறியடிக்க 89 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளார். ஓவலில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கில் 89 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அதனையும் முறியடித்துவிடுவார்.
Shubman Gill away 89 runs short of Don Bradman's world record
இதையும் படிக்க :35 ஆண்டுகள் பழையது..! டியூக்ஸ் பந்து விவகாரத்தில் இந்திய அணி அதிருப்தி!