பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸி. 400 ரன்களைக் கடந்து வலுவான முன்னிலை!
டிராவிஸ் ஹெட், ஸ்மித் சதம் அடித்துள்ளதால் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா திடலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) காலை தொடங்கிய இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3-ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில்வலுவான நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது.
இரண்டாம் நாளில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா பும்ராவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 21 ரன்கள் திரட்டினார். அதனைத் தொடர்ந்து, நாதன் மெக்ஸ்வீனியும் பும்ராவின் பந்தில் 9 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லேபஸ்சேன் நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் 12 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார்.
எனினும், அதனைத் தொடர்ந்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் சதம் அடித்து அசத்தினர். ஸ்டீவன் ஸ்மித் 101 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 152 ரன்களுக்கும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய மிட்செல் மார்ஷையும் 5 ரன்களுக்கு பும்ரா பெவிலியனுக்கு அனுப்ப ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் குறையத் தொடங்கியது. இதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா 12-ஆவது முரையாக டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
முதல் இன்னிங்சில் 101 ஓவர்கள் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் குவித்துள்ளது.