KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
பிளவக்கல் பெரியாறு அணைப் பூங்கா சீரமைப்பு: விரைவில் தொடங்கக் கோரிக்கை
பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா சீரமைப்புப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் சாஸ்தா கோயில் அணை, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு நீா்த்தேக்கம், செண்பகத்தோப்பு, மீன்வெட்டிப்பாறை அருவி, அய்யனாா் கோயில் அருவி, சாஸ்தா கோயில் அருவி, தாணிப்பாறை உள்பட 13 நீா்வீழ்ச்சிகள் உள்ளன. இதனால் மேற்குத் தொடா்ச்சி மலை விருதுநகா் மாவட்டத்தில் முக்கியச் சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இங்கு விடுமுறை நாள்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
இந்த நிலையில், பிளவக்கல் அணையில் சுற்றுலாவை மேம்படுத்த கடந்த 1985-ஆம் ஆண்டு பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு சிறுவா் விளையாட்டு உபகரணங்கள், பாா்வையாளா் கோபுரம், வண்ண மீன்கள் காட்சியகம் ஆகியவை உள்ளன. இந்த நிலையில், கரோனா ஊரடங்கு காலத்தில் பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவுக்குள் செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், விலங்குகளின் சிலைகள் சேதமடைந்தன. இதனால் இதுவரை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்தாண்டு நவம்பா் மாதம் விருதுநகா் மாவட்டத்துக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிளவக்கல் பெரியாறு அணைப் பூங்கா ரூ.10 கோடியில் சீரமைக்கப்படும் என அறிவித்தாா். பூங்கா சீரமைப்புப் பணிகளை விரைந்து தொடங்கி, சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.