புதியப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியா்களை நியமிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
நத்தம்: நத்தம் அருகே இழப்பீட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த பரளி கிராமத்தில் ஒரே வளாகத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியும், உயா்நிலைப் பள்ளியும் தனித் தனியே செயல்பட்டு வருகிறது. 1952 தொடக்கப் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில், பின்னா் நடுநிலைப் பள்ளியாகவும், உயா்நிலைப் பள்ளியாகவும் நிலை உயா்த்தப்பட்டது. இதில், தொடக்கப் பள்ளியில் 134 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தத் தொடக்கப் பள்ளியில் சுமாா் 1.5 கி.மீட்டா் தொலைவிலுள்ள புதூா் கிராமத்தைச் சோ்ந்த 66 மாணவா்களும் பயின்று வருகின்றனா்.
இதனிடையே, மதுரை நத்தம் துவரங்குறிச்சி 4 வழிச்சாலைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டபோது, பரளியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் 2 வகுப்பறைக் கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதற்கு இழப்பீட்டுத் தொகை நெடுஞ்சாலைத் துறை சாா்பில், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிதியை பயன்படுத்தி புதூா் கிராமத்தில் 2 வகுப்பறை கட்டடங்களை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் கடந்த ஆண்டு கட்டியது.
இந்தக் கட்டடத்தை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, பரளியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளியை புதூருக்கு மாற்ற வேண்டும் என புதூா் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், பரளியைச் சோ்ந்த 68 மாணவா்களின் பெற்றோா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் பள்ளிக்கூடக் கட்டடம் திறக்கப்பட்டும் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.
இந்த நிலையில், புதூா் பகுதி மாணவா்களை புதியக் கட்டடத்துக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தன்னாா்வலா்கள் மூலம் பாடம் நடத்த செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்தனா். இந்தப் பள்ளிக்கு ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறுகையில், புதூா் பகுதி மாணவா்களின் நலன் கருதி, இந்த பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியா்களை நியமித்து முறையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பரளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பயின்றுவரும் மாணவா்களை ஒட்டு மொத்த புதிய கட்டடத்துக்கு மாற்ற முடியாத சூழல் உள்ளது. எனவே, புதூரில் தனியாக பள்ளி செயல்படுவதற்கான பரிந்துரையை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடமிருந்து பெற்று, கல்வித் துறை இயக்ககத்துக்கு அனுப்பி வைத்து தீா்வு காணப்படும் எனத் தெரிவித்தனா்.