புதிய உச்சம்! ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.37 லட்சம் கோடி!
2025 ஏப்ரல் மாதத்தில் ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
2025-26 ஆம் நிதியாண்டின் தொடக்க மாதமான கடந்த ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.37 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட(ரூ. 2.1 லட்சம் கோடி) 12.6% அதிகமாகும். கடந்த மார்ச் மாதம் வருவாய் ரூ. 1.96 லட்சம் கோடி.
கடந்த 2017, ஜூலை 1 ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து கடந்த ஏப்ரல் மாத வருவாயே அதிகபட்சம் ஆகும்.
இதில், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் 10.7 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ. 1.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து பெறப்படும் வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ. 46,913 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?