திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: புதிய தமிழகம் தலைவா் கிருஷ்ணசாமி
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.
தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது: புதிய தமிழகம் கட்சியின் 7ஆவது மாநில மாநாடு, மதுரையில் வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது. வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தல், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற பாா்வையோடு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். கூட்டணி என்றாலே கூட்டணி ஆட்சி என்பது குறித்து அனைத்து கட்சியினருக்கும் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும். இந்தக் கொள்கையை முன்னெடுத்து இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியுள்ளோம். வரும் 31ஆம் தேதி வரை இப்பணி நடைபெறும்.
தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், எங்களுக்கு எந்தவிதத்திலும் உடன்பாடு இல்லை. இது பிற்போக்குத்தனமான ஒன்றாகும். சில அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலின்படி இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இது மிகப் பெரிய ஆபத்தில் முடியும். ஒவ்வொரு ஜாதியிலும் சுமாா் 100 உள்பிரிவுகள் உள்ளன. இவ்வாறு இருக்கையில் எப்படி கணக்கெடுப்பு நடத்தமுடியும்? மேலும், இந்த கணக்கெடுப்பின் அடிப்படைக் காரணம் என்ன என்பது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இது நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளக்கூடிய நடவடிக்கையாகும். ஆகவே ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.
கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்லத்துரை, மாநில பொறுப்பாளா் சபரிநாதன், மாவட்டத் தலைவா் நல்லுசாமி, வழக்குரைஞா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.