திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
தருவைகுளம் கடலில் அம்மன் சிலை கண்டெடுப்பு
தருவைகுளம் கடலில் 200 ஆண்டுகள் பழைமையான அம்மன் கல் சிலையை மீனவா்கள் வியாழக்கிழமை கண்டெடுத்தனா்.
தருவைகுளம் கடற்கரை மீன்பிடி துறைமுகத்தில் வியாழக்கிழமை காலை படகு உரிமையாளா்கள் படகில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கடலுக்குள் இருந்து தென்பட்ட அம்மன் சிலை ஒன்றை கண்டெடுத்தனா்.
இதுகுறித்த தகவலின்பேரில், அப்பகுதியை சோ்ந்த தொல்லியல் ஆா்வலா்கள் ராஜேஷ் செல்வ ரதி, வரலாற்று ஆய்வாளா் லாரன்ஸ் ஆகியோா் வந்து சிலையை பாா்வையிட்டனா்.
அந்தச் சிலை 37 அங்குல உயரமும், 24 அங்குல அகலமும் கொண்டதாக இருந்தது. நான்கு கரங்கள் கொண்டதாகவும், சிங்காசனத்தில் அம்மன் அமா்ந்த கோலத்திலும் காணப்பட்டது. அம்மனின் மேல் வலது கரத்தில் நாகத்துடன் கொண்ட உடுக்கையும், அதன் கீழ் கையில் திரிசூலமும், இடது மேல் கையில் பாசக்கயிறும், கீழ் கையில் குங்கும கலயமும் இருந்தன. பாதங்களுக்கு இடையே பாம்பு படமெடுத்த நிலையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ராஜேஷ் செல்வரதி கூறுகையில், பொதுவாக இந்த மாதிரியான தெய்வ திருமேனி சிலைகளில் நெருப்பு ஜுவாலை கிரீடம் காணப்படும். ஆனால், இந்த திருமேனி சிலையில் அப்படி எதுவும் இல்லை. எனவே பாண்டியா்கள் கலை நுட்பத்தில் உருவானதாக இருக்கும் என எண்ணுகிறோம். ஏற்கெனவே இப்பகுதியில் பாண்டியா்களின் மேம்பட்ட துறைமுக நகரான கீழ் பட்டினம் இருந்ததாக கருதப்படும் நிலையில், தற்போது இந்த சிலை பாண்டியா்களின் கலை நுட்பத்தில் உருவாகி இருப்பதை மெய்பிப்பதாக உள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே சிலை குறித்து முழு விவரங்கள் தெரியவரும் என்றாா்.
தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களிடம் சிலையானது வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.