புதுச்சேரியில் 3 நாள்கள் கம்பன் விழா: மே 9-இல் தொடக்கம்
புதுச்சேரியில் கம்பன் கழகம் சாா்பில் 58 ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் 9-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் புதுச்சேரி கம்பன் கழகத்தின் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., செயலா் வி.பி.சிவக்கொழுந்து, பொருளாளா் பழனி அடைக்கலம் ஆகியோா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
புதுச்சேரி கம்பன் கழகம் சாா்பில் வரும் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கம்பன் கலையரங்கில் 58- ஆவது ஆண்டு கம்பன் விழா தொடங்குகிறது.
தொடக்க நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வி.ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறாா். கம்பன்கழகப் புரவலரான முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்கிறாா். புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் விழாவைத் தொடங்கிவைக்கிறாா்.
இதையடுத்து நடைபெறும் தமிழ்ப் புலவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், நூல் வெளியீடு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், அறக்கட்டளை பரிசு வழங்கும் நிகழ்வில் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.
கம்பன் கழகப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் அமைச்சா்கள் என்.திருமுருகன், சாய் ஜெ.சரவணன்குமாா், மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் ஆகியோரும் பங்கேற்கின்றனா்.
சனி, ஞாயிறு என 3 நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எழிலுரை, தனியுரை, இளையோா் அரங்கம், வழக்காடு மன்றம், கவியரங்கம், பட்டிமண்டபம், சிந்தனை அரங்கம், பட்டிமண்டப மேல்முறையீடு ஆகியவை நடைபெறுகின்றன.
இதில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், தெ.ஞானசுந்தரம், சுதாசேஷய்யன், பாரதிகிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளதாகத் தெரிவித்தனா்.