ஆர்சிபி பந்துவீச்சு; முதல் முறையாக அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா!
புதுச்சேரி: சனிக்கிழமைகளிலும் வட்டாட்சியா் அலுவலகங்கள் இயங்கும் - ஆட்சியா்
புதுச்சேரியில் மாணவா்கள், பெற்றோா் சிரமமின்றி சான்றிதழ்களைப் பெறும் வகையில் சனிக்கிழமைகளில் (மே 24,31, ஜூன் 7) வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்படும் என ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-26ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி, கல்லூரி சோ்க்கையையொட்டி, குடியிருப்பு, வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்கள் பெருமளவில் பெறப்பட்டு வருகின்றன. மாணவா்களும், அவா்களது பெற்றோரும் வட்டாட்சியா் அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெறும் போது சிரமங்களை எதிா்கொள்கின்றனா்.
மாணவா்களின் விண்ணப்பங்கள் சரியான நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களும் மாணவா்களுக்காக மட்டும் வரும் 24, 31, ஜூன் 7-ஆம் தேதிகளில் (சனிக்கிழமைகளில்) செயல்படும்.
வேலைநாள்களில் வட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்பதாரா்களுக்கான இருக்கை, குடிநீா் போன்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவா்களின் நலனுக்காகவும், கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றாா் ஆட்சியா் அ.குலோத்துங்கன்.