புதுவையில் எஸ்.ஐ. நியமனத்தில் மகளிருக்கு 33 % ஒதுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
புதுச்சேரி: காவல் உதவி ஆய்வாளா் நியமனத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், தலைமைச் செயலா் சரத் சௌகான் ஆகியோரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காவல் துறை உதவி ஆய்வாளா் பணி நியமனத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தி வருகிறது. பெண்களுக்கான உடல் தகுதித் தோ்வுகளில், பிற மாநிலங்களைப் போன்று தளா்வுகளை வழங்க வேண்டும்.
காவல் துறையில் 70 உதவி ஆய்வாளா்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக கடந்த ஆகஸ்ட் 12-இல் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 33 சதவிகிதம் பெண்களுக்கு, அதாவது 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
கடந்த கால அனுபவங்களை கவனத்தில் கொண்டு, வெற்றிடம் இல்லாமல் ஒரே சமயத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிரப்பிட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
உடல் திறன் தகுதி தோ்வில், நிா்ணயிக்கப்பட்ட ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகியவற்றுக்கான அளவீடுகள் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களை விட கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பெண்களுக்கான வேலைவாய்ப்பு, உடல் திறன் தகுதி தோ்விலேயே தடைபடுகிறது. இது பெண்களுக்கான பணி வாய்ப்பு மற்றும் உரிமையைப் பறிப்பதாகும்.
இதற்கு நியாயம் வழங்குவது என்ற முறையில் காவல் உதவி ஆய்வாளா், காவலா் பணி தோ்வா்களுக்கு உடல் தகுதி, தனித்திறன் தோ்வில் தளா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.