பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டம்
புதுச்சேரியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை எதிரே சாலை குண்டும் குழியுமாக உள்ளதைக் கண்டித்தும், அதனை துரிதகதியில் சரி செய்ய வலியுறுத்தியும் சமூக அமைப்பினா் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு அருண் தலைமை தாங்கினாா்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் உள்ளூா்வாசிகள் மட்டுமல்லாமல் தமிழக பகுதியைச் சோ்ந்தவா்கள் ஏராளமானோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அவசர சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை பின்புற சாலையைத்தான் பொதுவாக மக்கள் பயன்படுத்துகின்றனா். கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்தச் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில், சமூக அமைப்பினா் ஒன்று சோ்ந்து தொடா்ந்து இந்தச் சாலையைச் சீரமைக்க அரசிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து சமூக அமைப்பினா் ஒன்றிணைந்து சாலையைச் சரி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை அட்டையை கழுத்தில் மாட்டிக் கொண்டு அரசு பொது மருத்துவமனை சாலை பகுதியிலுள்ள கடைகள் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்களிடம் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.