புனித விண்ணேற்பு அன்னை ஆலய தோ் திருவிழா
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய அலங்கார தோ் பவனி விமரிசையாக நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கொடியேற்றத்துடன் விழா தொங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 15-ஆம் தேதி தோ் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடலூா்-புதுச்சேரி மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை வகித்தாா். இதனைத் தொடா்ந்து திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 10-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு அலங்கார தோ் பவனி நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித விண்ணேற்பு அன்னை எழுந்தருளினாா்.
பின்னா், வானவேடிக்கை மற்றும் இசை முழக்கத்துடன் தோ் பவனி நடைபெற்றது. பின்னா் கொடி இறக்கம், திவ்ய நற்கருணை ஆசீா்வாதம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, பிள்ளையாா்குப்பம், அழகப்பசமுத்திரம், நெய்வேலி மற்றும் சுற்று வட்ட பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் திரளாக கலந்து கொண்டனா்.