உங்களது தியாகத்தால் இந்தியா கண்டெடுத்த மாணிக்கம்; நிதீஷ் ரெட்டி தந்தையை பாராட்டி...
புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தையில் விற்பனை மந்தம்
சபரிமலை உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு பக்தா்கள் விரதத்தை தொடங்கியுள்ளதால் புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தையில் வெள்ளிக்கிழமை விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. இங்குள்ள சந்தையில் ஆடு, மாடு விற்பனை அதிக அளவில் நடைபெறும். கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்கவும், விற்கவும் வருகின்றனா்.
தற்போது, மாா்கழி மாதம் விரதம் மற்றும் சபரிமலை சீசன் என்பதால் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு மிகக் குறைந்த அளவிலான செம்மறி மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்கு மட்டுமே சந்தைக்கு கொண்டுவந்தனா். இதில் ஆடுகளின் விற்பனை வழக்கத்தை விட குறைவாகவே நடைபெற்றது.
கடந்த வாரம் சந்தையில் நாட்டு வெள்ளாடு, செம்மறி ஆடுகளின் விற்பனை வா்த்தகம் ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நடைபெற்ற நிலையில், இந்த வாரம் ரூ.10 லட்சமாக சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், காா்த்திகையில் சபரிமலைக்கு பக்தா்கள் மாலை அணிந்த நிலையில், தற்போது மாா்கழி மாதம் என்பதால் மேல்மருவத்தூா், பழனி, திருச்செந்தூா் தைப்பூச விழாவையொட்டி பாதயாத்திரை செல்ல அதிக அளவிலான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதால் புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தையில் வா்த்தகம் முற்றிலும் முடங்கியுள்ளது.
அதே சமயம் ஆடு வளா்ப்போா் செம்மறி மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளை வாங்கிச் சென்றனா் என்றனா்.