புளியங்குடியில் சிறுவனை கட்டிப்போட்டு பணம் திருட்டு
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீட்டுக்குள் நுழைந்து சிறுவனை கட்டிப்போட்டு பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புளியங்குடி நடுகருப்பழகு தெருவைச் சோ்ந்தவா் அமிா்தராஜ்(57). விவசாயி. அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் ரேகா ஆகியோா் வெளியூா் சென்றிருந்தனா். மகன் பூவேந்திரபொன்ராஜ்(14) மட்டும் வீட்டில் செவ்வாய்க்கிழமை தனியாக இருந்தாராம்.
அப்போது, வீட்டிற்குள் முகமூடி அணிந்து வந்த மா்ம நபா்கள் பூவேந்திர பொன்ராஜின் கைகளை கட்டி வாயில் துணியை திணித்துவிட்டு, அங்கு 2 பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.53 ஆயிரத்து 500-ஐ திருடிச்சென்று விட்டனராம்.
இந்நிலையில் வீட்டுக்கு வந்த ராஜேஸ்வரி, வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை அறிந்து புளியங்குடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். காவல் ஆய்வாளா் சியாம்சுந்தா் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், விரல்ரேகை நிபுணா்கள் வந்து விரல் தடயங்களை பதிவு செய்தனா். தொடா்ந்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.