சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை
பெண் அடித்துக் கொலை: கணவா், இரு மகன்கள் கைது
வாழப்பாடி அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்த வழக்கில் கணவா், இரு மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.
வாழப்பாடியை அடுத்த மேட்டுடையாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டட தொழிலாளி பொன்னுவேல் (45). இவரது மனைவி வசந்தி (38). இத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் கவின் (21). மேடை நடனக் கலைஞராக உள்ளாா். 17 வயது இளைய மகன் தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா்.
வீட்டில் தனியாக இருக்கும்போது வசந்தி அடிக்கடி கைப்பேசியில் பேசுவது தெரியவந்ததால் இவரது நடத்தையில், கணவா் பொன்னுவேல், மகன்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மகன்கள் இருவரும் திங்கள்கிழமை வீட்டில் இருந்த வசந்தியை தாக்கியுள்ளனா். இதில் மயக்கமடைந்த வசந்தியை மீட்ட அவரது உறவினா்கள், சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
வசந்தியை அவரது இரு மகன்கள் மட்டுமின்றி கணவா் பொன்னுவேலும் சோ்ந்து தாக்கியதாக அவரது உறவினா்கள் ஏத்தாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதனையடுத்து, வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த், ஏத்தாப்பூா் காவல் ஆய்வாளா் செல்வராஜ் ஆகியோா் விசாரணை நடத்தி, பொன்னுவேல், அவரது மூத்த மகன் கவின் ஆகிய இருவரையும் கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனா். 17 வயது மகனை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.