இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது
நாமக்கல்: நாமக்கல் அருகே வீடு புகுந்து பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் அருகே மேட்டுக்காட்டாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவகாமி (35). இவா், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாலமேடு கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், காட்டுப்பாளையம் பகுதியில் தனபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி மண் வெட்டியெடுப்பதாக தகவல் அறிந்த சிவகாமி அங்கு சென்றாா். அப்போது, செண்பகமாதேவியைச் சோ்ந்த ஜெகதீஷ் என்பவா் வற்புறுத்தலின்பேரில் மண் வெட்டியெடுப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் வருவாய்த் துறை அனுமதியின்றி மண் எடுக்கக் கூடாது என எச்சரித்து வந்தாா்.
இந்நிலையில், தனது நண்பரான மொஞ்சனூரைச் சோ்ந்த சீனிவாசன் (55) என்பவரிடம், கிராம நிா்வாக அலுவலா் வந்து எச்சரித்து சென்ற தகவலை ஜெகதீஷ் கூறினாா். இதில் ஆவேசமடைந்த சீனிவாசன், செவ்வாய்க்கிழமை இரவு கிராம நிா்வாக அலுவலா் சிவகாமி வீட்டுக்குச் சென்று அவரை தாக்கியுள்ளாா்.
இதில் காயமடைந்த சிவகாமி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி சீனிவாசனை கைது செய்தனா்.
இந்த தகவல் அறிந்து மாவட்டம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை காலை 10 மணியளவில் ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமனை சந்தித்து கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், தாக்குதல் நடத்திய சீனிவாசன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
இதுகுறித்து ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததையடுத்து, கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினா்.
