பெரம்பலூா் அருகே பைக்கில் சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி பலி
பெரம்பலூா் அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரிய வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் பாலாஜி (38). முடி வெட்டும் தொழிலாளியான இவா் தனது மனைவி சித்ராவுடன் (32), பெரிய வடகரை கிராமத்திலிருந்து வேப்பந்தட்டைக்கு பைக்கில் வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். வெண்பாவூா் வனப்பகுதிச் சாலையில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே வந்தபோது, பெரம்பலூரிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த கை.களத்தூா் போலீஸாா் சென்று, தம்பதியின் சடலங்களைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான அரும்பாவூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சின்னதம்பியை (33) கைது செய்து விசாரிக்கின்றனா்.