கரூர் விஜய் பரப்புரை: இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை; ஆண்கள், பெண்கள், குழந்...
பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளா்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்!
பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியவரைக் கைது செய்யக் கோரி, இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 6 போ் நிரந்தரத் தூய்மைப் பணியாளா்களாகவும், 70 போ் தனியாா் நிறுவனத்தின் மூலம் ஓப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளா்களாவும் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், வடகரை பள்ளி வாசல் பின்புறம் உள்ள தெருவில் தூய்மைப் பணியாளா் பெத்தனசாமி, குப்பைச் சேகரிப்பு வாகன ஓட்டுநா் வைரவன், பெண் ஊழியா் என மூவா் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த நபா், தூய்மைப் பணிகளைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்ததோடு மூவரையும் தாக்கினாா். இதையறிந்த, தூய்மைப் பணியாளா்கள் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் பிரிவில் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாரும் நகராட்சிப் பணியாளா்களும் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியவரைக் கைது செய்ய வேண்டும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, தூய்மைப் பணியாளா்கள் இரண்டாவது நாளாக சனிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் நகராட்சி நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தியபோது, தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.