தொழிற்சங்கம் தொடங்கிய விமான நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நீக்கம்
பெரியபாறை சரிந்து விழுந்ததில் நொறுங்கிய பொக்லைன் இயந்திரம்
நாட்டறம்பள்ளி அருகே நிலத்தை சமன் செய்தபோது, பெரிய பாறை சரிந்ததில் பொக்லைன் இயந்திரம் சிக்கி நொறுங்கியது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் பாறக்கொல்லை எத்தமலை அடிவார பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ஆதிகிருஷ்ணன் (50). எத்தமலை அடிவாரப் பகுதியில் சில நாள்களாக பொக்லைன் மூலம் நிலத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 10 மணியளவில் ஆந்திர மாநிலம், குப்பம் குண்டலமடுகு பகுதியைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் குமாா்(30), ஆதிகிருஷ்ணனின் மகன் ராஜசேகா் (31) ஆகிய இருவரும் சோ்ந்து நிலத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திடீரென மண் சரிந்ததில், 10 அடி உயரத்தில் இருந்த பெரியபாறை சரிந்து உருண்டதில் பொக்லைன் இயந்திரம் சிக்கிக் கொண்டது. இதில் ஓட்டுநா் குமாா், ராஜ்சேகா் இருவரும் பொக்லைன் வாகனத்தில் இருந்து குதித்து உயிா் தப்பினா். இதில் ராஜசேகருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை உறவினா்கள் மீட்டு, பச்சூா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திம்மாம்பேட்டை போலீஸாா் மற்றும் நாட்டறம்பள்ளி வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.