பெற்றோரைக் கொலை செய்த நபா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை
பெற்றோரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
ஈரோடு அருகே நஞ்சனாபுரம் வேப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் ரவிகுமாா் (38). இவரது பெற்றோருக்கு இவா் ஒரே மகன். இவரது சகோதரி காதலித்து திருமணம் செய்து சென்றுவிட்டாா். ரவிகுமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொத்து தொடா்பான பிரச்னை இருந்து வந்தது. இதில் தனது தந்தை பழனிசாமியை ரவிகுமாா் கடந்த 2022 மே மாதம் அடித்துக் கொலை செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னா், பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த ரவிகுமாா் கடந்த ஜூலை 26ஆம் தேதி அவரது தாய் ருக்மணி (65) என்பவரையும் கட்டை மற்றும் கம்பியால் அடித்துக் கொலை செய்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவிகுமாரைக் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் பெற்றோரைக் கொலை செய்த ரவிகுமாரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா்.
இந்தப் பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் ச.கந்தசாமி, ரவிகுமாரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிகுமாரிடம் ஈரோடு தாலுகா போலீஸாா் இதற்கான உத்தரவு நகலை வழங்கினா்.