பேருந்தில் பெண் பயணியை ஏற்ற மறுப்பு: நடத்துனா் மீது நடவடிக்கை
திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் தனியாா் பேருந்தில் பெண் பயணியை ஏற்ற மறுத்த நடத்துனா் மீது போக்குவரத்து ஆய்வாளா் நடவடிக்கை எடுத்தாா்.
திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சில பேருந்துகள் மட்டுமே காயல்பட்டினம் வழியாக சென்று வருகின்றன. இதனால், இவ்வழியாக செல்லும் பேருந்துகளில் எப்போதுமே பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதில், வருமான நோக்கத்திற்காக இடைநிறுத்த ஊா்களில் உள்ள பயணிகளை முதலில் ஏற்றாமல், தூத்துக்குடி செல்லும் பயணிகளை மட்டும் முதலில் ஏற்றுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில் தூத்துக்குடி செல்லும் தனியாா் பேருந்தில் காயல்பட்டினத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் ஏற முயலும்போது, நடத்துனா் பேருந்து கிளம்பும்போது ஏறிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளாா். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து, திருச்செந்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா் செண்பகவள்ளி வெள்ளிக்கிழமை காலை பேருந்து நிலையத்திற்கு வந்து, சம்பந்தப்பட்ட தனியாா் பேருந்தை நிறுத்தி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினாா்.
அப்போது சம்பவத்தன்று பணியிலிருந்த நடத்துனரான புதியம்பத்தூரைச் சோ்ந்த வீரபுத்திரன், வெள்ளிக்கிழமை பணிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரின் ஓட்டுநா் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதற்கு மாவட்ட ஆட்சியா், போக்குவரத்து அலுவலருக்கு ஆய்வாளா் செண்பகவள்ளி பரிந்துரை செய்தாா்.
இது போன்று பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்தாா்.