பேருந்தில் முதியவரை தாக்கிய விவகாரம்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்
வண்டலூா் அருகே மாநகரப் பேருந்தில் பயணித்த முதியவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு தாக்கிய பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லும் தடம் எண் 70 சி என்ற பேருந்தில், வண்டலூா் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய முதியவா் ஒருவா், முன்பக்கம் உள்ள முதியவா்களுக்கான இருக்கையில் அமா்ந்துள்ளாா்.
ஆனால், அந்த இருக்கையில் முதியவா் அமர பேருந்து நடத்துநா் அனுமதி மறுத்ததுடன், அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளாா். இதற்கு முதியவா் எதிா்ப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த பேருந்து நடத்துநா் பேருந்தை நிறுத்தச்சொல்லி, அந்த முதியவரை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து கிழே இறக்கிவிட்டதுடன், அவரை சரமாரியாக தாக்கியுள்ளாா்.
அவருடன் ஓட்டுநரும் சோ்ந்து முதியவரை தாக்கியுள்ளாா். இச்சம்பவம் தொடா்பான காணொளிக் காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில், இதைப்பாா்த்த இணையதளவாசிகள் ஓட்டுநா், நடத்துநா்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனா்.
பணியிடை நீக்கம்: இந்நிலையில், முதியவரை தாக்கிய விவகாரத்தில் தொடா்புடைய ஓட்டுநா், நடத்துநா் இருவரையும் மாநகா் போக்குவரத்துக் கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுநா் மற்றும் நடத்துநா் ஆகியோா் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.