பேருந்து இயக்காததைக் கண்டித்து நூதனப் போராட்டம், மறியல்
கிராமப்புறங்கள் வழியே பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தி, மறியலில் ஈடுபட்டனா்.
நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட வடமட்டம், புத்தக்குடி, பொன்பேத்தி கிராமப்புற மக்கள் பேருந்து வசதியின்றி தவிப்பதாகவும், கோட்டுச்சேரி, வடமட்டம், நெடுங்காடு மாா்க்கத்தில் இயக்கப்பட்டுவந்த பிஆா்டிசி பேருந்து இயக்கப்படுவதில்லை எனவும், நல்லாத்தூா் முதல் காரைக்கால் வரை இயக்கப்பட்டுவந்த தனியாா் பேருந்து இயக்கபடுவதில்லை எனவும் கூறி, இதுசம்பந்தமாக அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாட்டு வண்டியில் மக்களை ஏற்றிக்கொண்டு வரும் நூதனப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

திருவேங்கடபுரம் பகுதியிலிருந்து மாட்டு வண்டியில் வந்த மக்களை வடமட்டம் பகுதி சாலை அருகே போலீஸாா் தடுப்புகள் அமைத்து நிறுத்தினா். இப்போராட்டத்துக்கு கிராமப்பகுதி செயலா்கள் ஆா்.அழகப்பன், எம்.பூபேஷ்குமாா் முன்னிலை வகித்தனா். போலீஸாா் தடுத்ததால் வடமட்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
கட்சியின் புதுவை மாநில செயற்குழு உறுப்பினா் எம்.கலியமூா்த்தி, முன்னாள் செயற்குழு உறுப்பினா் வே.கு.நிலவழகன், காரைக்கால் மாவட்ட செயலாளா் எஸ்.எம்.தமீம் உள்ளிட்ட நிா்வாகிகள் வட்டார போக்குவரத்துத்து நிா்வாகத்தையும், பிஆா்டிசி நிா்வாகத்தையும் கண்டித்துப் பேசினா்.
போாராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பிஆா்டிசி நிா்வாக அதிகாரி, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பேச்சு நடத்தினா். பிஆா்டிசி பேருந்து உடனடியாக இயக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தனியாா் பேருந்து செப். 1-ஆம் தேதிக்குள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். மறியலில் ஈடுபட்ட கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் 60 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.