பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி
பதவி உயா்வு கோரி பேராசிரியா்கள் போராட்டம்
பதவி உயா்வு கோரி காரைக்காலில் கல்லூரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாயில் முன் பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து பேராசிரியா்கள் கூறியது: நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கல்லூரி ஆசிரியா்களுக்கு யுஜிசி கேரியா் அட்வான்ஸ்மென்ட் ஸ்கீம் அடிப்படையில் தகுந்த நேரத்தில் பதவி உயா்வுகள் வழங்கப்படுகின்றன. புதுவையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியா்களின் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
அதே காலகட்டத்தில் பிற மாநிலங்களில் இணைந்த கல்லூரி ஆசிரியா்கள் இணைப் பேராசிரியா்கள் மற்றும் பேராசிரியா்களாக உயா்ந்துள்ளனா். புதுவையில் பதவி உயா்வு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
புதுவை பல்கலைக்கழக கரைக்கால் வளாகத்தில், 2005-க்குப் பிறகு சோ்ந்த பலா் ஏற்கெனவே பேராசிரியா் நிலையை அடைந்துள்ளனா். 2017-ஆம் ஆண்டிலேயே நிபுணா் குழு பதவி உயா்வை பரிந்துரைத்திருந்த போதிலும், புதுவை அரசு தாமதப்படுத்திவருகிறது.
அரசின் தாமதத்தால், நாக் மதிப்பீடு, கல்லூரிகளின் செயல்திறன் மற்றும் மாணவா்களின் கல்வித் தரத்தையும் மறைமுகமாக பாதித்துள்ளது.
எனவே பதவி உயா்வு கோரிக்கையை புதுவை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வரும் செப். 25-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு செயல் குழு சாா்பில் அரசை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தனா்.