``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
பேருந்து நிலையத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்
பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென சிஐடியு தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்ட சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டக் கன்வீனா் எஸ். அகஸ்டின் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு:
பெரம்பலூா் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் குழந்தைகள், பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் விதமாக சுற்றித்திரியும் வெறி நாய்களையும், தெரு நாய்களையும் கண்டறிந்து அப்புறப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
மின் கம்பங்களில் மின் பாதையுடன் தனியாா் கேபிள் வயா்கள் இணைத்து செல்வதால், மின்தடை நீக்குவதில் மின்வாரிய ஊழியா்களுக்கு பல்வேறு இடா்பாடுகளும், மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, மின் கம்பத்தில் மின் பாதையோடு இதர கேபிள் வயா்கள் செல்வதை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் கோரி: குரும்பலூா் பேரூராட்சி 13 ஆவது வாா்டுக்குள்பட்ட பொதுமக்கள் அளித்த மனுவில், குரும்பலூா் பேரூராட்சி 13 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, கழிவுநீா் வடிகால், சமுதாயக் கூடம், அங்கன்வாடி மையம் ஆகியவை கட்டித் தர வேண்டும். சுற்றுச்சுவா் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.