பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!
வாழப்பாடி: பேளூரில் மாரியம்மன் கோயில் ஊர்வலத்தின் போது கண்ணனூர் நகர் பகுதி இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்ணனூர் நகர் பகுதி மக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் வாழப்பாடி-பேளூர் பிரதான சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
வாழப்பாடி அருகே பேளூரில் மாரியம்மன் கோயில் திருவிழா இரு நாள்களாக நடைபெற்று வருகிறது. புதன்கிழமை இரவு அம்மன் திருவீதிவுலா நடைபெற்றது.
அப்போது, டிஜே இசைக்கு நடனம் ஆடுவதில் பேளுரை சேர்ந்த இளைஞர்களுக்கும் கண்ணனூர் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பேளூர் பகுதி இளைஞர்கள், கண்ணனூர் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுவாமி ஊர்வலத்தின் போது கண்ணனூர் நகர் பகுதி இளைஞர்களை தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, வியாழக்கிழமை காலை கண்ணனூர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வாழப்பாடி-பேளூர் பிரதான சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறைபிடித்து திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி, மாணவிகள் உள்பட பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி போலீஸார், கோயில் ஊர்வலத்தின் போது கண்ணனூர் நகர் பகுதி இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.