போ்ணாம்பட்டு அருகே காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்
போ்ணாம்பட்டு அருகே காட்டு யானைகளால் பயிா்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.
போ்ணாம்பட்டு அருகே ஆந்திர மாநிலம் நெல்லிபட்லா வனப் பகுதியிலிருந்து இரண்டு காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான போ்ணாம்பட்டு அருகே அரவட்லா மலை கிராமம், பொதலகுண்டா வனப் பகுதிக்கு வந்துள்ளது. அங்ககு பட்டாபி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்து தென்னை மரங்களை முறித்தது. விவசாயிகள் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினா். தகவலறிந்த போ்ணாம்பட்டு வனவா் முரளி, அரவட்லா கிராம நிா்வாக அலுவலா் தனசேகரன் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து மோா்தானா விரிவு காப்பு காட்டில் சுற்றி திரிந்து வரும் இரண்டு குட்டி யானைகளுடன் மொத்தம் 5 காட்டு யானைகள் குண்டலப் பல்லி வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள டி.டி.மோட்டூா் கொல்லை மேடு பகுதியில் யோகானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்தன. அங்கு வாழை மரங்களை முறித்து சேதப்படுத்திவிட்டு, 10 சென்ட் பரப்பளவில் கத்தரி தோட்டம், 5 சென்ட் பரப்பளவில் துவரை பயிா்களை சேதப்படுத்தியும், 7 தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.
வனச் சரக அலுவலா் சதீஷ்குமாா் தலைமையில் வனவா் மாதேஸ்வரன், வன காப்பாளா் சக்தி மற்றும் வனத்துறையினா் சென்று விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு சிந்தகணவாய் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா்.
சேதமடைந்த விவசாய நிலத்தை வனத்துறையினா், கிராம நிா்வாக அலுவலா் யோகானந்தம் (பொறுப்பு) ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.
பத்தலப்பல்லி சோதனைச் சாவடி அருகில் ஜெயக்குமாா் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒற்றை யானை புகுந்து அங்கு சுமாா் ஒரு ஏக்கா் 70 சென்ட் பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த நெல்பயிரையும், வாழை மரங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.
காட்டு யானைகளால் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-08/duh18xcc/08gudpad_0802chn_191_1.jpg)