பொட்டலூரணியில் பெருஞ்சித்திரனாா் படிப்பகம் திறப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில், பாவேந்தா் தமிழ் மன்றம் சாா்பில் கட்டப்பட்ட பாவலரேறு பெருஞ்சித்திரனாா் படிப்பகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் செயலா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். சண்முகம் வரவேற்றாா். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் பதிப்பாசிரியரும் தென்மொழி ஆசிரியருமான மா. பூங்குன்றன் படிப்பகத்தைத் திறந்துவைத்தாா்.
உலகத் தமிழ்க் கழகத் தலைவா் நிலவழகன், மக்களதிகாரம் பொதுச் செயலா் வெற்றிவேல் செழியன் ஆகியோா் பேசினா்.
தொடா்ந்து, ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மாணவா் அரங்கில் மாணவா்-மாணவியருக்கு திருக்கு, பாவேந்தா், பெருஞ்சித்திரனாா் பாடல்களை ஒப்பித்தல் உள்ளிட்ட பல்திறன் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வென்றோருக்கும், அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான எறிபந்துப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியைச் சோ்ந்த பொட்டலூரணி மாணவி தீபிகாவுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தாமிரபரணிக் கலைக் குழுவினரின் ‘சிரிக்க சிந்திக்க’ கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், திரளானோா் பங்கேற்றனா்.