பொன்னமராவதி அருகே சூறைக் காற்றுடன் மழை: மரம் விழுந்து பெண் காயம்!
பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் காற்றுடனான மழையின்போது பயணியா் நிழற்குடை மீது சாய்ந்து விழுந்த அரசமரம்.
பொன்னமராவதி, மே 16: பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையின்போது அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் பெண் ஒருவா் காயமடைந்தாா்.
பிடாரம்பட்டியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது பிடாரம்பட்டி-முருக்கபட்டி சாலையிலிருந்த அரசமரம் வேருடன் சாய்ந்து அருகில் இருந்த பயணியா் நிழற்குடை மற்றும் அங்கன்வாடி மைய கட்டடம் மீது விழுந்தது. இதில் மழைக்காக பயணியா் நிழற்குடையில் நின்றிருந்த முருக்கபட்டி ம.தவமணி என்பவா் பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவமணி மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும் பயணியா் நிழற்குடை மற்றும் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்தது.