Akshay Kumar: "6.30 மணிக்கு இரவு உணவு; வாரத்தில் ஒரு நாள் விரதம்" - அக்ஷய் குமா...
போக்குவரத்து நெரிசல்: சென்னையிலிருந்து தாமதமாகப் புறப்பட்ட விமானங்கள்!
பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் சென்னையிலிருந்து 10-க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.
சென்னை பல்லாவரம் மேம்பாலத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மேம்பாலத் தடுப்பில் மோதியது. இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வர, பேருந்து ஓட்டுநர் சாலையின் தடுப்பின் மீது பேருந்தை ஏற்றியுள்ளார்.
இதனால் தடுப்புகள் சேதமடைந்ததால் பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மறுவழியில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இந்நிலையில் விமான நிலையம் செல்லும் பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பலரும் விமான நிலையங்களுக்குச் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப சென்னையில் இருந்து பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
சென்னை விமான நிலையத்தில் கோலாலம்பூர், மஸ்கத், கொழும்பு விமானங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமான நிலையில் புறப்பட்டன.
தற்போது பல்லாவரம் மேம்பாலம் பகுதில் போக்குவரத்து சீராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்புகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கல்லூரிப் பேருந்தின் ஓட்டுநர் உதயா என்பவர் மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.