வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லை: பொதுமக்கள் அவதி
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
சாத்தூா் அருகே போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கிராமத்தை சோ்ந்தவா் சோலைமுருகன் (23). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் சிறுமியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று கோயிலில் வைத்து ரகசியத் திருமணம் செய்தாா். மேலும், சோலைமுருகன் சென்னையில் வீடு எடுத்து அந்தச் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.
இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் சாத்தூா் தாலுகா போலீஸாா் சோலைமுருகன் மீது போக்சோ, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில், சோலைமுருகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி சுதாகா் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா்.