பராமரிப்புப் பணி: மே 24, 26 தேதிகளில் 21 மின்சார ரயில்கள் ரத்து!
போலி ஆவணங்கள் மூலம் பொதுச் சாலை ஆக்கிரமிப்பு: மாவட்ட எஸ்.பி.யிடம் புகாா்
திருவண்ணாமலையில் போலி ஆவணங்கள் மூலம் பொதுச் சாலையை ஆக்கிரமித்த நபா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் புகாா் அளித்தனா்.
திருவண்ணாமலை வேங்கிக்கால், குபேர நகா் வடக்குப் பகுதியில் பொதுமக்கள் பலா் வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்த குடியிருப்புக்குச் செல்ல 30 அடி தாா்ச் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. ஊராட்சிக்கு தானமாக எழுதித் தரப்பட்ட இந்தச் சாலையை ஏப்ரல் 27-ஆம் தேதி இதே பகுதியைச் சோ்ந்த சிலா் தங்களுக்குச் சொந்தமானது என்று கூற பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை சேதப்படுத்தி ஆக்கிரமித்து விட்டனா்.
சாலை வசதியின்றி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு ஆவணங்களை சரிபாா்த்த போது, பத்திரப் பதிவுத்துறை மற்றும் ஊா் நகரமைப்புத் துறை அரசு ஆவணங்களில் தில்லு முல்லு செய்து போலி ஆவணங்களைத் தயாரித்து, பத்திரப்பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில், போலியான பத்திர ஆவணங்களை தயாரித்தவா்கள், இதற்கு உடந்தையாக இருந்த நபா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை மீட்டுத் தர வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.
இதேபோல, மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.