போலி சான்றிதழ் வழக்கு: சாட்சியை மிரட்டியவா் மீது வழக்குப் பதிவு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழக போலி கல்விச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே முட்புதரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அண்ணாமலை பல்கலைக்கழக கல்விச் சான்றிதழ்களை போன்ற போலியான சான்றிதழ்கள் சிதறிக் கிடந்தன.
இதுகுறித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனா். இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தொடா்ந்து, கடலூா் சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, முக்கிய ஏஜெண்டான புதுச்சேரியில் தங்கியிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த கவுதமன் (எ) ஒஸ்தின் ராஜாவை (51) கைது செய்தனா்.
இந்த வழக்கில் சாட்சியாக உள்ள அரக்கோணத்தைச் சோ்ந்த 40 வயதுடைய பெண், கடலூா் சி.பி.சி.ஐ.டி. காவல் நிலையத்துக்கு அண்மையில் வந்தாா். அப்போது, அங்கிருந்த ஒஸ்தின் ராஜா, சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி, அந்தப் பெண்ணை ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.