ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திமுக ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி வலியுற...
மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் முழுவீச்சில் ஏற்பாடுகள்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத நிறைவையொட்டி டிசம்பர் 26-ல் மண்டல பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அன்றிரவு நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் ஜன.14-ம தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக டிச.30 முதல் மீண்டும் நடை திறக்கப்பட்டது.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் மும்முரமாகச் செய்து வருகிறது. சபரிமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களும் ஐயப்பனைத் தரிசனம் செய்துவிட்டுப் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது என சபரிமலை நிர்வாக மாவட்ட நீதிபதி அருண் எஸ். நாயர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போது தினசரி 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். மகரவிளக்கு ஜோதி விழாவின் ஒருபகுதியான திருவாபரணம் ஊர்வலம் ஜன.12-ஆம் தேதி பந்தளத்திலிருந்து தொடங்குகிறது. விழாவை சுமுகமாக நடத்த அனைத்து அரசுத் துறைகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது. பல்வேறு துறைகளின் ஆய்வுக்குப் பிறகு ஊர்வலத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் செய்து முடிக்கப்படும்.
மேலும், மகரவிளக்கு ஜோதியைக் காணப் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்களில் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறை, காடுகள் மற்றும் சுகாதாரத்துறைகளின் ஒருங்கிணைப்புடன் ஆய்வு நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டநெரிசல் ஏற்படாமல் இருக்க சபரிமலை முழுவதும் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்படுகின்றனர்.