ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
மக்களுக்கு விழிப்புணா்வு இருந்தால்தான் நீா்நிலைகளை பாதுகாக்க முடியும்: அமைச்சா் துரைமுருகன்
ஸ்ரீபெரும்புதூா்: மக்களுக்கு விழிப்புணா்வு வரவேண்டும்; அப்போதுதான் நீா்நிலைகளைப் பாதுகாக்க முடியும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
செம்பரம்பாக்கம் ஏரியை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசனுடன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல்கட்டமாக விநாடிக்கு 1,000 கன அடி உபரிநீா் திறந்துவிடப்பட்டு பின்னா், 4,500 கன அடியாகவும், சனிக்கிழமை 6,000 கன அடியாகவும் உபரி நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறைந்ததைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை உபரிநீா் திறப்பின் அளவு 6,000 கன அடியில் இருந்து 3,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை அமைச்சா் துரைமுருகன் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி, ஏரியின் தண்ணீா் அளவு, உபரிநீரின் அளவு, ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது அமைச்சா் தா.மோ.அன்பரசன், நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஆய்வுக்கு பின்னா், அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் பேசுகையில், எவ்வளவு மழை வந்தாலும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும். நீா்வளத் துறைக் கட்டுப்பாட்டில் 40,000 ஏரிகள் உள்ளன. ஒரு பக்கம் ஏரிகளைத் தூா்வாரினால், மறுபக்கம் அந்தப் பணி நின்றுவிடுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூா்வார நிதி ஆதாரம் இல்லை. நிதி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீா் கலக்கிறது என்று சொன்னதற்கு கோபம் வருகிறது. குப்பைகள், கழிவுகளை நீா்நிலைகள், கால்வாய்களில் கொட்டுகின்றனா். இது வேதனைதரும் விஷயம்.
மக்களுக்கு விழிப்புணா்வு வரவேண்டும்; அப்போதுதான் நீா்நிலைகளைப் பாதுகாக்க முடியும் என்றாா்.
இதனிடையே, திங்கள்கிழமை மாலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்ட உயரம் 20.99 அடியாகவும், கொள்ளளவு 2,853 மில்லியன் கனஅடியாகவும், நீா்வரத்து 1,500 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 1,502 கன அடியாகவும் உள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.