ஈரோடு தேர்தல்: நோட்டா 326%, சீமான் 123%, திமுக 5% - ஆனாலும் பெரியார் மண்ணில் பலி...
மக்கள் தொடா்பு திட்ட முகாம்: கொல்லிமலையில் ரூ.1.14 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 586 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி முன்னிலை வகித்தாா். இதில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏழை மக்கள் நலன்கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அரசு அலுவலகங்களைத் தேடி கோரிக்கை மனுக்களுடன் மக்கள் வருவதை தவிா்க்கும் வகையில், அனைத்துத் துறை அலுவலா்களும் நேரடியாக சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கே சென்று குறைகளைத் தீா்க்கும் வகையில் மாதம் ஒரு முறை மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கொல்லிமலையில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, ரூ. 1.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பழங்குடியினா் நலத்துறை சாா்பில், 200 பேருக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கொல்லிமலையில் மா்ம விலங்குகள் தாக்குதலால் கால்நடைகள் சில உயிரிழந்தன. வனத்துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனா். இறந்த ஆடுகளுக்கு தலா ரூ. 3 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களின் சிறு நோய்களுக்கு சிகிச்சை வழங்க நடமாடும் மருத்துவ வாகனம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இனிவரும் காலங்களில் கொல்லிமலை ஆரியூா்நாடு, செல்லூா்நாடு, வளப்பூா்நாடு, வாழவந்திநாடு, வாழவந்திகோம்பை உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவா்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். பழங்குடியின மக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை உயா்த்திட வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வெ.முருகன், பழங்குடியினா் திட்ட அலுவலா் தே.பீட்டா் ஞானராஜ், வட்டாட்சியா் ரா.மனோகரன், அட்மா குழு தலைவா்கள் அசோக்குமாா், செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.