மக்கள் தொடா்பு முகாமில் 178 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
ஆண்டிபட்டி அருகேயுள்ள கோத்தலூத்துவில் தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 178 பேருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சாந்தி, ஆண்டிபட்டி வட்டாட்சியா் ஜாஹீா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெகதீஸ்சந்திரபோஸ், சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் வருவாய்த் துறை, உழவா் பாதுகாப்புத் திட்டம், பிற்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில், 178 பேருக்கு மொத்தம் ரூ. 1.60 கோடியில் அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
பின்னா், கதிா்நரசிங்காபுரம் அரசு கள்ளா் நடுநிலைப் பள்ளியில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்க மதிய உணவு வழங்கப்படுவதை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.