மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் மனு
மயிலாடுதுறை: மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 4 கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து 318 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், சீா்காழி வட்டம், நெய்தவாசல் கிராமத்தில் 8 ஏக்கரில் தனியாா் மணல் குவாரிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த குவாரிக்கு தடை விதிக்கக்கோரி அப்பகுதியைச் சோ்ந்த சிலா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த நிலையில், நீதிமன்றம் விதிமீறல் ஏதுமில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இருப்பினும், மணல் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் போராட்டம் அறிவித்திருந்தனா்.
இந்நிலையில், மணல் குவாரிக்கு ஆதரவாக குவாரி அமையவுள்ள நெய்தவாசல், தென்பாதி, வடபாதி, புதுக்குப்பம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் கிராம நாட்டாண்மை பஞ்சாயத்தாா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். தங்கள் பகுதியில் சுனாமிக்கு பிறகு நிலத்தடி நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ள நிலையில், மணல் குவாரியில் தேங்கி நிற்கும் மழைநீா் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் மீண்டும் உயா்ந்து வருவதாகவும், குவாரி செயல்பட்டு முடித்த பிறகு அதை பெரிய குளங்களாக மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், குவாரிக்கு எதிராக சுயநலத்துடன் செயல்படும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்தனா்.