மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம்: 6,866 விவசாயிகளுக்கு ரூ.20.90 லட்சம் மானியம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு ரூ.20.90 லட்சம் மதிப்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவு விவசாயிகள் நெல், வாழை, ரப்பா், கிராம்பு, நல்லமிளகு, காய்கறிகள், பழங்கள், ஊடுபயிா்கள் உள்ளிட்டவைகள் பயிா் செய்து வருகிறாா்கள்.
முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம் இயற்கை முறையில் மண்வளத்தை பெருக்கி அதிக மகசூல் பெற்றிட விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும்.
அதனடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் 89 விவசாயிகளுக்கு மானிய விலையில் மண்புழு உரப்படுக்கைகள் ரூ. 3 லட்சத்துக்கும், வேளாண் காடுகளை ஊக்குவித்தல் திட்டத்தில் 182 விவசாயிகளுக்கு 7ஆயிரம் வேப்ப மரக்கன்றுகள் முழு மானியத்தில் ரூ.1.04 லட்சத்துக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வட்டாரத்துக்கு ஒரு உயிா்ம வேளாண்மை மாதிரி பண்ணைத் திடல் வீதம் 9 செயல் விளக்கத் திடல்கள் ரூ.90ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இயற்கை இடுபொருள் தயாரிப்பு மையம் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு, ஒரு குழுவுக்கு ரூ.1 லட்சம் வீதம் 2 குழுவுக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
நெல் ஜெயராமன் மரபு சாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 69 விவசாயிகளுக்கு 1.37 டன் பாரம்பரிய நெல் விதைகள் ரூ.34ஆயிரத்து 250 மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இயற்கையிலேயே பூச்சிக்கொல்லி பண்புகளுடைய 1லட்சத்து 30ஆயிரம் ஆடாதொடா, நொச்சி நடவு கன்றுகள் முழு மானியத்தில் 2 ஆயிரத்து 600 விவசாயிகளுக்கு ரூ.2.06 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, மண்வளம் காக்க 3ஆயிரத்து 50 மண்வள அட்டைகள் ரூ.9.15 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
865 விவசாயிகளுக்கு 991 லிட்டா் திரவ உயிரி உரங்கள் ரூ.1.50 லட்சம் மானியம் என மொத்தம் 6 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு ரூ.20.90 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிகழாண்டும் செயல்படுத்தப்படவுள்ளது.
எனவே, விவசாயிகள் அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை நில ஆவணங்களுடன் அணுகி இத்திட்டத்தில் பயன்பெறலாம் என்றாா்.