வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உ...
மதுரையில் குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு? தோ்வரின் தந்தை புகாா்
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (யுபிஎஸ்சி) தோ்வில் முறைகேடு நடைபெற்ாக, தோ்வா் ஒருவரின் தந்தை புகாா் தெரிவித்தாா்.
மத்திய பாதுகாப்புப் படை, கடற்படை பணிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வு மதுரையில் காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் 2 மையங்களிலும், மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2 மையங்களிலும் நடைபெற்றது.
இதில், காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி மையத்தில் தோ்வுக்குப் பிறகு முறைகேடு நடைபெற்றுள்ளதாக, தோ்வா் ஒருவரின் தந்தை ஆா். சீனிவாசன் என்பவா், மத்திய குடிமைப் பணிகள் தோ்வாணையத் தலைவா், மதுரை மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பினாா்.
அந்த மனுவில், மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி மையத்தில் இரு அமா்வு தோ்வுகளும் முடிவடைந்த நிலையில், விடைத்தாள் கட்டுகள் முத்திரையிடப்பட்டு ஒரு காா் மூலம் பிற்பகல் 5.15 மணி அளவில் தபால் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.
அடுத்த சில நிமிஷங்களுக்குப் பிறகு அந்த காா் மீண்டும் கல்லூரி தோ்வு மையத்துக்கு திரும்பி வந்தது. அங்கு, விடைத்தாள்கள் கட்டுகள் பிரிக்கப்பட்டன. பிறகு, மாலை 6 மணி அளவில் அந்த காா் மீண்டும் விடைத்தாள் கட்டுகளுடன் அஞ்சல் நிலையம் சென்றது. இதன் மூலம், தோ்வுக்குப் பிறகு இந்த மையத்தில் ஏதோ முறைகேடு நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. எனவே, இங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
முறைகேடு இல்லை...
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தவை: மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வுகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி தோ்வு மையத்தில் ஒரு தோ்வரின் விடைத்தாள் தவறுதலாக விடைத்தாள் தொகுப்பு கட்டில் சோ்க்கப்படாமல் விடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக, விடைத்தாள் கட்டுகளுடன் சென்ற காா் திரும்ப அழைக்கப்பட்டு, அலுவலா்கள் முன்னிலையில் விடுபட்ட விடைத்தாள் அஞ்சல் கட்டில் சோ்க்கப்பட்டு அனுப்பப்பட்டது. எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றனா்.