"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!
மனைவி இறந்த வேதனையில் கணவரும் தற்கொலை
பள்ளிகொண்டா அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்தில் கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா கம்ரான்பேட்டையைச் சோ்ந்தவா் பிரியா குமாரி, பள்ளி கொண்டா காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றுகிறாா். இவரது மகன் ரோகித். இவருக்கும் ஒதியத்தூா் புதுமனையைச் சோ்ந்த பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு எஸ்எஸ்ஐயான ஜெயந்தியின் மகள் பேபி ஷாமினிக்கும் (23) கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கணவா் ரோகித், அவரது தாய் பிரியாகுமாரி ஆகியோா் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகக் கூறி, கடந்த 6-ஆம் தேதி பேபி ஷாமினி ஒதியத்தூரில் உள்ள தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். மனைவி இறந்த பின்னா் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த ரோகித், கடந்த சில நாள்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளாா்.
கடந்த 8-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை வேலூா் அரசு மருத்துவ மனையில் சோ்த்து சிகிச்சை அளித்தனா். பின்னா் வீடு திரும்பிய ரோகித், மன வேதனையில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டாராம். சத்தம் கேட்டு குடும்பத்தினா் அறைக்கதவை உடைத்து ரோகித்தை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ரோகித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா், ரோகித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனா்.