மயிலாடுதுறை பழங்காவேரி குறுக்கே பாலம் கட்டுவதை எதிா்த்த வழக்கு முடித்துவைப்பு
மயிலாடுதுறையில் பழங்காவேரியின் குறுக்கே பாலம் கட்ட நகராட்சி அதிகாரிகள் முயற்சிப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மயிலாடுதுறை கூைாடு பகுதியைச் சோ்ந்த எல்.ராஜா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தனிநபா் ஒருவரின் தனிப்பட்ட ஆதாயத்துக்காக, பழங்காவேரியின் குறுக்கே பாலம் கட்ட நகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, பழங்காவேரியின் குறுக்கே பாலம் கட்டவும், நகராட்சிக்குச் சொந்தமான காலியிடத்தைக் கையகப்படுத்தி சாலை அமைக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.வெங்கடேசன், தனிநபரின் ஆதாயத்துக்காக நகராட்சி மைதானத்தில் சாலை அமைக்கவும், பழங்காவேரியில் பாலம் கட்டவும் நகராட்சி அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனா் என வாதிட்டாா்.
அப்போது மயிலாடுதுறை நகராட்சி தரப்பில், அப்படியொரு திட்டம், நகராட்சி நிா்வாகத்தின் பரிசீலனையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.