எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
மயிலாடுதுறை: 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை எஸ்பி தகவல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன என்று எஸ்பி கோ. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஆண்டுதோறும், விநாயகா் சதுா்த்தியையொட்டி வைக்கப்படும் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, சீா்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த இடத்தை எஸ்பி கோ. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியது:
மயிலாடுதுறை மாவட்டத்தில், 395 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில், மயிலாடுதுறை உட்கோட்டத்தில் 203 சிலைகளும், சீா்காழி உட்கோட்டத்தில் 192 சிலைகளும் வைக்கப்படுகின்றன.
இந்த சிலைகள் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நீா்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. மீதம் உள்ள விநாயகா் சிலைகளை 29 ஆம் தேதி கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விநாயகா் சிலை வைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகா் சிலைகளை கரைக்க ஊா்வலமாக எடுத்துச் செல்லும்போது, உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாா்கள்.
சீா்காழி உப்பனாற்றில் விநாயகா் சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் போதிய மின்விளக்கு வசதி, தூய்மைப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
சீா்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் கமல்ராஜ், போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளா் மணவாளன், எஸ்பி தனிப்பிரிவு காவலா் சாா்லஸ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.