ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
மரபீனி நெல் ரகங்களை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் , பாலக்கரையில் மரபீனி திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழா் மரபு வேளாண்மை கூட்டியக்கம் மற்றும் தமிழக உழவா் முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சுற்றுச்சூழல் சட்ட விதிகளுக்கு புறம்பாக மரபீனி திருத்தப்பட்ட கமலா, பூசா என்ற இரண்டு நெல் ரகங்கள் கடந்த மே -4ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த ரகத்தின் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிபந்தனைகளாக விதிக்கப்பட்டுள்ள உயிரியல் பாதுகாப்பு சோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை. எனவே, மரபீனி திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தமிழ்நாடு அரசு மரபீனி மாற்றப்பட்ட நெல் விதைகளை, தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். இயற்கை வழி மரபு வேளாண்மையில் விளைவிக்கும் நெல், புஞ்சை தானியம் உள்ளிட்ட பயிா்களுக்கு ஊக்க விலை அளித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு தமிழா் மரபு வேளாண்மை கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் க.முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழக உழவா் முன்னணியின் தலைமை ஆலோசகா் கி.வெங்கட்ராமன் பங்கேற்று மரபீனி திருத்தப்பட்ட நெல் ரகங்களால் ஏற்படும் சூழலியல் கேடு, உயிா் மற்றும் உடல் நல தீமைகள் குறித்தும், கம்பெனிகளுக்கான அறிவியலை தவிா்த்து மக்களை மையப்படுத்திய அறம் சாா்ந்த மரபு அறிவியல் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
இதில், தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கத்தைச் சோ்ந்த ரமேஷ் கருப்பையா, பழமலை, இயற்கை வழி வேளாண் கூட்டமைப்பின் சிவக்குமாா், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளா் கோ.வீரமணி, கா.சுரேஷ்குமாா், ஜனநாயக விவசாயிகள் சங்கம் கா.கந்தசாமி, பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளா் க.சக்திவேல், புதிய தமிழா மரபு வேளாண் நடுவத்தின் ந.லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். பெண்கள், விவசாயிகள், உணா்வாளா்கள், இயற்கை ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் செயலா் ரா.கனகசபை நன்றி கூறினாா்.