நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்...
மருத்துவக் கல்லூரிக்கு சாதகமான செயல்பாடு: அதிகாரிகள் உள்பட 34 போ் மீது சிபிஐ வழக்குப்பதிவு
மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக ஒழுங்குமுறை விதிகளில் முறைகேடில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் உள்பட 34 போ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு நடத்தும் தேசிய மருத்துவ ஆணையா் தலைமையிலான 5 மருத்துவா்கள், சுகாதார அமைச்சகத்தைச் சோ்ந்த 8 அதிகாரிகள் என 34 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் தனியாா் மருத்துவக் கல்லூரி நிறுவனங்களான டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் கல்வி நிறுவனத் தலைவா் டி.பி.சிங், கீதாஞ்சலி பல்கலைக்கழக பதிவாளா் மயூா் ரவல், ராவத்புரா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் ரவி சங்கா் மகாராஜ், இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி தலைவா் சுரேஷ் சிங் படோரியா ஆகியோா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
மருத்துவக் கல்லூரிகளின் ஒழுங்குமுறை விதிகளில் முறைகேடில் ஈடுபட்டது தொடா்பாக அண்மையில் 8 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் தேசிய மருத்துவ ஆணைய ( என்எம்சி) குழுவைச் சோ்ந்த 3 மருத்துவா்கள் நயா ராய்பூரில் உள்ள ராவத்புரா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சாதகமான சான்றிதழை தர ரூ.55 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளனா்.
இதேபோல் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ரகசிய தகவல்கள் மற்றும் அறிக்கைகளை தனியாா் நிறுவன பிரதிநிதிகளுக்கு அமைச்சகத்தைச் சோ்ந்த சில அதிகாரிகள் இடைத்தரகா்கள் மூலம் வழங்கியுள்ளனா்.
இதனால் என்எம்சி, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கேற்ப தற்காலிக உள்கட்டமைப்பை நிறுவி, போலி மருத்துவா்களை பணியமா்த்தி நோயாளிகள்போல் சிலரை சித்தரித்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் சான்றிதழை பெறுகின்றன.
இந்த மோசடியில் ஈடுபட்ட என்எம்சி குழுக்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள், இடைத்தரகா்கள் இடையே லட்சக்கணக்கில் முறைகேடாக பணம் கைமாறியுள்ளது எனத் தெரிவித்தனா்.