மருத்துவ கலந்தாய்வு: ஜூலை இறுதியில் தொடங்க திட்டம்
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அகில இந்திய கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின்( டிஜிஹெச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) இணையவழியே நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது. மாநில கலந்தாய்வைப் பொருத்தவரை தோராயமாக ஜூலை 30-ஆம் தேதி நடத்த வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இந்த மாத இறுதியில் கலந்தாய்வு தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த சில நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி என 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
தவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்கள், தனியாா் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 550 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.
பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. இவற்றில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டு 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.