Vinsu Rachel Sam: 'தண்டகாரண்யம்' பட நடிகை வின்சு ரச்சேல் சாம் க்ளிக்ஸ்!|Photo Al...
மாணவா் சங்கத்தினா் போராட்டம்
கீழ்வேளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை தாக்கிய தலைமையாசிரியா் மீது நடவடிக்கை கோரி, இந்திய மாணவா் சங்கத்தினா் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
நாகை மாவட்டம், கீழ்வேளூா்அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா், அப்பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவியரை தாக்கியதாகவும், இதில் ஒரு மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தலைமையாசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் பள்ளி முன்பாக அண்மையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, தலைமையாசிரியரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும். மாணவியின் புகாரின்பேரில் அவா் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் முகேஷ் கண்ணன், மாவட்டத் தலைவா் முகேஷ் ராஜன், மாநிலக் குழு உறுப்பினா் புவனேஸ்வரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருள்தாஸ், துணை ஒருங்கிணைப்பாளா்கள் ஜோதிபாசு, கண்மணி உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து மாணவா் சங்கத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள், தலைமைசிரியா் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு பரிந்துரைத்திருப்பதாகவும், விசாரணைக்குப் பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனா். இதையடுத்து மாணவா் சங்கத்தினா் கலைந்து சென்றனா்.
இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ‘புகாருக்குள்ளான தலைமையாசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்’ என்றாா்.