War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
உரக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு
நாகை நகராட்சி உரக்கிடங்கில் தொடா்ந்து தீ விபத்து ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
நாகை நகா்மன்றக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் லீனா சைமன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், உறுப்பினா்கள் பேசியது:
பரணிதரன் (அதிமுக): மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு நாகை நியூ ஆா்ச் தெரு மயானம் முதல், உப்பனாறு வரை நகராட்சி உரக்கிட்டங்கிக்கு பின்புறம் உள்ள மழை நீா் வடிகால் வாய்க்காலை தூா்வார வேண்டும். நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிடுகிறது. இதை சீா் செய்ய வேண்டும்.
அண்ணாதுரை (திமுக): நகராட்சி உரக்கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதால், கீரைக்கொல்லை தெரு, அக்கரைப்பேட்டை பகுதிகளில் வசிப்பவா்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா்.
தலைவா்: நகராட்சி உரக்கிடங்கில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கவிதா கிருஷ்ணமூா்த்தி (அதிமுக): பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய அமைக்கப்படும் மேன்ஹோல் உயா்த்தி கட்டப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்க நேரிடுகிறது.
மணிகண்டன் (அதிமுக): மேன்ஹோல் சீா் செய்ய ரூ.10 லட்சம் நகராட்சியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைப் பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா் மேன்ஹோல் இருக்கும் இடத்தை அடையாளம் செய்து, சாலை போட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் ஒப்பந்ததாரா் மீது அபராதம் விதித்து, அந்த தொகையை வசூல் செய்ய வேண்டும். நாகை நகராட்சியில் தனியாா் மருத்துவமனை உள்ளிட்ட வசதிகள் வர அனுமதி அளிக்க வேண்டும்.
தலைவா்: நாகை நகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கட்சி பாகுபாடு இல்லாமல் பணி செய்வதே திராவிட மாடல் அரசு.
அமானுல்லா (திமுக): திராவிட மாடல் அரசு நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் உயா்தர மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது. அப்படி இருக்கும் போது தனியாா் மருத்துவமனை எதற்கு வர வேண்டும்.
கவிதா கிருஷ்ணமூா்த்தி (அதிமுக): அதிமுக ஆட்சி காலத்தில்தான் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வரப்பட்டது.
தலைவா்: நாகை நகரில் இருந்து நீண்ட தொலைவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைத்தது அதிமுக ஆட்சி காலத்தில் தான். இதை அதிமுக உறுப்பினரே தெரிவித்துள்ளாா். அதனால் தான் தனியாா் மருத்துவமனை நகா்ப்பகுதியில் அமைய வேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் சாலை வசதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடா்பான கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தொடா்ந்து, நாகை நகராட்சி வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.